கஷ்டங்கள் ஆயிரம்! நீங்க நல்ல வழி

கஷ்டங்கள் ஆயிரம்! நீங்க வழிகள்
கஷ்டம்1 - கடவுள் அருள் இருந்தால் போதுங்க. கஷ்டம் நம்மை அண்டாது. அந்த அருள் கிடைப்பது தான் ரொம்பக் கஷ்டமான விஷயம்.
கஷ்டம்2 - கடவுள் அருள் இருந்தால் மட்டும் போதுமா? நிறையச் சம்பாதிக்கிறது தாங்க கஷ்டம். என்ன பிரச்சனை வந்தாலும் பணம் வேணுமே. பணம் இருந்தால் கஷ்டமான விஷயம் என்று எதுவுமே இல்லை.என்னைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் நிறையச் சம்பாதிக்கிறது தான்.
கஷ்டம்3 - நான் நிறையச் சம்பாதிக்கிறேன். எனக்கு ஏற்ற மாதிரி மனைவி அமைய வேண்டுமே. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமல்லவா! நல்ல துணைவி அமைந்து விட்டால் வாழ்க்கையில் கஷ்டமே இல்லை.
கஷ்டம்4 - பணம் இருந்தா படிப்பு வந்துடுமா? என் குழந்தைகளுக்குப் படிப்பு வரணுமே. நான் படிக்கும் போதும் கூட இவ்வளவு வீட்டுப் பாடம் செய்ததில்லேங்க..... நானும் என் மனைவியும் படுகிற பாட்டைச் சொன்னா, உங்க தளத்தில் 100 பக்கங்கள் எழுதலாம். (!) என்னைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் நம் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது தான்.
கஷ்டம்5 - என் பையனுக்கு, அவனுக்குப் பிடித்த மாதிரி நல்ல வேலை கிடைக்கணும். என் பொண்ணுக்கு நினைக்கிற படி நல்ல வரன் கிடைக்கணும். இன்னும் எவ்வளவோ இருக்குங்க. என்னைப் பொறுத்தவரையில் நம் குழந்தைகளை அவர்களுக்கேற்றவாறு திருப்திப் படுத்திக் கரை சேர்ப்பது தான் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம்.
கஷ்டம்6
ஒழுக்கம், நேர்மை தாங்க முக்கியம். என்னைப் பொறுத்தவரையில் நல்ல மனுஷன் என்று பேர் வாங்குகிறது தான் ரொம்பக் கஷ்டம்.
கஷ்டம்7
ஊருக்குள்ளே நான் தாங்க பெரிய மனுசன். ஆனா இப்படிப் பெரிய மனுசனாகவே இருக்க நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் தெரியுமா உங்களுக்கு? எதாவது வழி இருந்தால் சொல்லுங்க. (!)
இப்படி ஆயிரமாயிரம் கஷ்டங்கள் பலருக்கும் ஏற்படுவதுண்டு....!
அந்தக் காலத்தில் ஒரு குரு, தன் சீடர்களோடு தன்னுடைய ஆசிரமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு சின்ன ஆறு இருக்கிறது. அதைக் கடந்து சிறிது தூரம் செல்ல வேண்டும். குரு, சீடர்களைப் பார்த்து "சீடர்களே, மனித வாழ்க்கையில் கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் தவிர்ப்பது எப்படி? என்று உங்களுக்கு உணர்த்தப் போகிறேன். கவனமாக நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்" என்று கூறினார். "அதோ அந்தப் புல்லை பிடுங்கி சிறிது இடம் தள்ளி வையுங்கள்" என்று குரு கூறினார். சீடர்களும் 'இதெல்லாம் ஒரு வேலையா?' என்று நினைத்துக் கொண்டு, ஒவ்வொருத்தரும் தன்னுடைய ஒரு விரலாலே ஒரு புல்லை பிடுங்கி சிறிது இடம் தள்ளி வைத்தார்கள். சிறிது தூரம் சென்றவுடன், "அதோ அந்தச் செடியை பிடுங்கி சிறிது இடம் தள்ளி வையுங்கள்" என்று குரு கூறினார். சீடர்களும் 'எதோ விஷயம் இருக்கிறது' என்று நினைத்துக் கொண்டு, ஒவ்வொருத்தரும் தன்னுடைய ஒரு கையால் ஒரு செடியை பிடுங்கி சிறிது இடம் தள்ளி வைத்தார்கள். இன்னும் சிறிது தூரம் சென்றவுடன், "அதோ அந்த மரத்தை பிடுங்கி சிறிது இடம் தள்ளி வையுங்கள்" என்று குரு கூறினார். சீடர்களும் 'நம்முடைய பலத்தைச் சோதிக்கிறார் போல' என்று நினைத்துக் கொண்டு, ஒவ்வொருத்தரும் தன்னுடைய கைகளால் ஒரு மரத்தைப் பிடித்து இழுத்தார்கள். முடியவில்லை. சிறிது சிறிதாகப் பள்ளம் தோண்டி, எப்படியோ மரத்தை இழுத்து, தூக்க முடியாமல் தூக்கி, பக்கத்து இடத்தில் பள்ளம் தோண்டி நட்டார்கள். இன்னும் சிறிது தூரம் சென்றவுடன், "அதோ அந்தப் பெரிய ஆலமரத்தைப் பிடுங்கி சிறிது இடம் தள்ளி வையுங்கள்" என்று குரு கூறினார். சீடர்கள் திகைத்தார்கள். குரு, களைத்துப் போன சீடர்களைப் பார்த்து," சீடர்களே, அந்தச் சின்னப் புல்லைப் போலத் தான் கஷ்டங்களும், பிரச்சனைகளும் - என்று கூறினார். என்ன நண்பர்களே! இந்தக் கதை மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் நமது கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் நாம் தான் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.

உலகத்திலேய ரொம்பச் சுலபமான விஷயம் அடுத்தவங்களுக்கு ஆலோசனை அல்லது அறிவுரை சொல்வது.